
டேனியல் ஹகீகத்ஜூ
அறிவியல் ரீதியில் குர்ஆன் நூறு சதவீதம் துல்லியமானது என்று சில முஸ்லிம்கள் கோருகிறார்கள். முஸ்லிம்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அறிவியல் என்பது உண்மையைப் பரிபூரணமாகப் பிரதிநிதித்–துவம் செய்யக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், குர்ஆனோ அந்த உண்மையைப் படைத்தவனுடைய வாக்காக இருக்கின்றது என்பதால், தர்க்க ரீதியில், அவ்விரண்-டுக்கும் நடுவே கனகச்சிதமான பொருத்தம் நிலவியாக வேண்டும் (என்று எதிர்பார்க்கப்படுகிறது).
ஆயினும் இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் அல்ல. இதனை ஒப்புக்கொள்வதற்கு நீங்களொரு கூனிய (Thomav Kàhn எனும் அமெரிக்க இயற்பியலாளரின் கருத்தியலை ஏற்கும்) பின்நவீனத்துவவாதியாக இருந்தாக வேண்டுமென்கிற அவசிய-மில்லை. அறிவியலின் பெரும்பகுதி இயல்பிலேயே தற்காலிகத் தன்மையிலானது என்பதை அறிவியல்சார் சமூகமே கூட ஒப்புக்-கொள்கிறது. அதாவது, புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் அறிவியல் புதுப்பிக்கப்படவும் பரிணமிக்கவும் செய்கின்றது.
உதாரணத்திற்கு, இன்று நம்மிடம் உள்ளதிலேயே அறிவியல் ரீதியில் மிகவும் வலுவான கோட்பாடு ‘குவியப் புலக் கோட்பாடு’
(Qauntum Field Theory) தான். அதனையே கூட, இயற்பியலாளர்கள் முற்றிலும் பிழையானது என்றோ; அல்லது குறைந்தபட்சம், அதனைக் காட்டிலும் முழுநிறைவான அதிகத் துல்லியமான (புவியீர்ப்பு விசையையும் கணக்கில் எடுத்துக்கொள்கிற) ஓர் கோட்-பாட்டின் அரைகுறைத் தோராய வடிவமென்றோ எண்ணுகின்றனர்.
தம்முடைய ஆய்வுத் துறையைப் பொறுத்த வரை, இறுதி உண்மையைக் கண்டறிந்துவிட்டதாக எந்தவொரு விஞ்ஞானி–யாலும் இன்று கோர முடியாது (வெகு சிலர் வேண்டுமானால் அவ்வாறு சொல்லிக் கொள்ளலாம்). இன்னும் சொல்லப்போனால், “அறிவியலால் ஒருபோதும் நூறு சதவீதம் உண்மையை அறிந்து-கொள்ள முடியாது; தமக்கு முந்தைய கோட்பாட்டை உண்மை-யல்ல என்று மட்டுமே அதனால் நிறுவ முடியும்” என்பார்கள் பாப்பரிய சாய்வு கொண்ட அறிவியலாளர்கள் (Karl Popper எனும் மெய்யியலாளரின் கருத்தை ஏற்பவர்கள்).
இதற்கொரு உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இயற்பியலாளர்கள், எல்லையற்ற அளவை-யும் வயதையும் கொண்ட இந்தப் பிரபஞ்சம் மாறாததொரு நிலையில் இருந்துவந்ததாக நம்பினார்கள். 1930-களில்தான் பிரபஞ்சத்தின் வளர்ச்சிக்கான பெருவெடிப்புக் கோட்பாட்டை (Bing Bang Theory) அறிவியலாளர்கள் தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள். ‘நித்தியப் பிரபஞ்சம்’ (eternal Univerve) எனும் கருத்து, வரையறுக்கப்பட்டவோர் புள்ளியில்—தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்ற குர்ஆனின் வருண-னைக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை.
உதாரணமாக, 1900-களின் ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அந்தச் சமயத்தில் நடப்பிலிருந்த ‘பிரபஞ்சத்தின் மாறாநிலைக் கோட்பாட்டுடன்’ இணங்கிப்போக வேண்டுமென்பதற்காக தொடர்புடைய குர்ஆன் வசனங்களை மாற்றி விளக்க முனைந்தி-ருந்தால், முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ பிரபலமாக்கப்பட்ட சமயத்தில் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி-ருந்திருக்கும். அதே வகையில் பார்த்தால், இன்று நடப்பிலுள்ள அறிவியலைப் பயன்படுத்தி சிலர் குர்ஆனுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டுக்கும் மாற்று விளக்கம் கொடுக்கின்-றார்களே, அந்த அறிவியல் மட்டும் மீண்டும் முப்பது நாற்பது ஆண்டுகளில் அதே போலத் தலைகீழாக மாறிவிடாது என்பதற்கு என்ன நிச்சயம்? அறிவியலின் சந்தடி நிறைந்த வரலாற்றுப் போக்கை கருத்தில் கொண்டால், அவ்வாறு நிகழ்வதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
இறுதியாக, பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.
நாம் இவ்வாறு சொல்வதால், அறிவியலில் கண்டறியப்படும் பல்வேறுபட்ட கருத்துகளின் ஒளியில் குர்ஆனைக் குறித்து சிந்திக்கவோ அதன் வசனங்கள் பற்றி ஆராயவோ கூடாது என்று பொருளாகுமா? நிச்சயம் அவ்வாறல்ல. தாராளமாக அதனைச் செய்யலாம். அவ்வாறான ஆராய்ச்சியில் ஈடுபடும்போது சிலர் தம்முடைய இறைநம்பிக்கை (ஈமான்) வலுப்படுவதாக உணர்கி-றார்கள், நாம் அதனைச் சிறுமைப்படுத்தக் கூடாது. எனினும் இங்கு நம் கவனத்திற்குரியது என்னவென்றால், அந்தத் தனிப்-பட்ட அனுபவமானது ஒரு குர்ஆன் விளக்கவுரையாக மாறி, அதனை அவர் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும்; இன்னும் கேடாக, “குர்ஆனும் அறிவியலும்” என்பது குறித்தவொரு மெய்யி-யல் கோட்பாடாக அது உருவெடுப்பதும்தான். இது பிரச்சினைக்குரியது. ஏனென்றால், குர்ஆனைக் குறித்து சிந்தித்து அதனைப் பொது அரங்கில் விளக்கவுரையாக முன்வைக்க முனையும்போது அது குர்ஆன் விரிவுரைக்கென்றே (தஃப்சீர்) சரிவர வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் அடியொற்றியதாகவும், இறைவாக்குடன் பேணப்பட வேண்டிய ஒழுங்கினை (அதபு) பின்பற்றியதாகவும் அமைந்திருக்க வேண்டும். இது தொடர்பில் நம்முடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்:
அல்லாஹ்வின் வேதத்தைக் குறித்து எவரொருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி கருத்துரைக்கிறாரோ, அவருடைய அந்தக் கருத்து சரியானதாக இருந்த போதிலும் கூட, அவர் தவறிழைத்தவராகி விடுகிறார்.
தமிழில்: ஷான் நவாஸ்


