முஸ்லிமாக வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் அல்குர்ஆனின் தேவை இன்றியமையாதது. அல்குர்ஆன் உலகத்துக்கான நடைமுறை வேதம் என்று அலி இஸ்ஸத் பெக்கோவிச் (ரஹ்) கூறுவார். ஏனெனில் உலக வாழ்க்கைக்குத்தான் வழிகாட்டல்கள் தேவை. மறுமை வாழ்க்கைக்கான சமன்பாடுகள் முற்றிலும் உலக வாழ்க்கையின் சமன்பாடுகளிலிருந்தும் வேறுபட்டவையாகும். அல்குர்ஆன் உலக சமன்பாடுகளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கான வழிகாட்டலைத்தான் தருகின்றது. மரணத்துக்கு முன்னரான வாழ்வில் உலகத்தில் வாழ்வதற்குத்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான். அந்த வகையில் அல்குர்ஆன் என்ற வஹியின் அறிவின் மீது மனித அறிவைப் பிரயோகிப்பதனூடாகவே ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதன் தனக்குரிய வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அல்லாஹுத் தஆலா அதனை ஓர் அற்புதமாக இறக்கியருளியிருக்கின்றான்.

அல்குர்ஆனை அணுகுதல் என்பதன் அர்த்தம் அதனை விளங்கும் நோக்குடன் மனிதன் அதன் மீது தனது அறிவைப் பிரயோகிப்பதாகும். வஹியின் அறிவுடன் மனித அறிவு ஊடாடுகின்ற போது சிந்தனைகளும், பாதைகளும், வழிகளும் பிரசவிக்கப்படுகின்றன.

இங்கு அல்குர்ஆனை (வஹியை) அணுகுவதற்கான இரண்டே வழிமுறைகள் தான் இருக்கின்றன.

  1. ஸுன்னத்தான வழிமுறை – அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த முறையில் அல்குர்ஆனை அணுகுதல்.
  2. பித்அத்தான வழிமுறை – அதற்கு மாற்றமான முறைகளில் அல்குர்ஆனை அணுகுதல்.

ஸுன்னாவைப் பின்பற்றி அல்குர்ஆனை அணுகுபவர்களுக்கு அல்குர்ஆன் நேர்வழி காட்டும். பித்அத்தான முறையில் அல்குர்ஆனை அணுகுகின்றவர்கள் அல்குர்ஆனின் பெயராலேயே வழிதவறிச் செல்வார்கள். “அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்” என்ற அல்குர்ஆன் ஆயத்துக்கூடாக இதனைப் புரிந்து கொள்ள முடியும் (அல்லாஹு அஃலம்).

அல்குர்ஆனை அணுகுவதில் எது ஸுன்னத்தான வழிமுறை எது பித்அத்தான வழிமுறை என்பதை ஒரு ஹதீஸுக்கூடாக மிகத் தெளிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

من قال في القرآن برأيه فليتبوأ مقعده من النار

“யார் தனது கருத்தின் பிரகாரம் அல்குர்ஆனின் விடயத்தில் (விளக்கம்) கூறுகிறாரோ, அவர் நரகத்தில் தனக்கான இடத்தைப் பதிவு செய்துகொள்ளட்டும்”

என்பதே அந்த ஹதீஸாகும்.

அல்குர்ஆனின் விடயத்தில் புத்தியை (அறிவை)ப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை பெரும்பாலும் இந்த ஹதீஸை வைத்துத்தான் சிலர் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த ஹதீஸ், எங்குமே அல்குர்ஆனை அணுகும் விடயத்தில் அறிவைப் பயன்படுத்துவதற்கான தடையைப் போடவில்லை என்பது முக்கியமாக புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அனைத்துக்கும் அப்பால் அறிவைப் பயன்படுத்தாமல் அல்குர்ஆனை விளங்க முடியாது என்ற எளிய உண்மையை நாம் மறந்து விடலாகாது.

அப்படியென்றால் இந்த ஹதீஸ் என்ன சொல்கின்றது?

இந்த ஹதீஸில் பாவிக்கப்பட்டிருக்கும் ‘பிரஃயிஹி’ என்ற பிரயோகம் அல்குர்ஆன் எப்படி அணுகப்பட வேண்டும், எப்படி அணுகப்படக் கூடாது என்பதை தெளிவாகச் சுட்டுகின்ற பிரயோகமாகும். இதன் நேரடி அர்த்தமாக ‘தனது (சொந்தக்) கருத்தின் பிரகாரம்’ அல்லது ‘தனது நிலைப்பாட்டின் பிரகாரம்’ அல்லது ‘தனது மனோநிலையின் பிரகாரம்’ என்பனவற்றைக் கூறலாம். ‘ரஃய்’ என்ற சொல்லுக்கு ‘அறிவு’ என்றொரு மொழிபெயர்ப்பு இல்லை என்பதை கவனத்திற் கொள்க!

மனிதர்கள் பல்வேறு தொடர்புகளினூடாக, அனுபவங்களினூடாக, பாரம்பரியங்கள் மற்றும் சம்பிரதாயங்களினூடாக அல்லது அன்பு, வெறுப்பு, கோபம், குரோதம் போன்ற இன்னோரன்ன உணர்ச்சிகளினூடாக, அல்லது சார்பியங்களினூடாக தமக்கென்று சில கருத்துக்களை, நிலைப்பாடுகளை, சிந்தனைப் பாங்குகளை, மனோநிலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அந்தக் கருத்துக்களும், மனோநிலைகளும், நிலைப்பாடுகளும் அவரவரது வாழ்வின் அனைத்து விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்துவதும் தவிர்க்க முடியாததாகும். ஆனால் இப்படியாக ஒருவருக்குள் உருவாகியிருக்கின்ற கருத்துக்களும் மனோநிலைகளும் நிலைப்பாடுகளும் அல்குர்ஆனின் மீது பிரயோகிக்கப்பட முடியாது என்பதையே இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. அவ்வாறு பிரயோகிக்கப்படுவதானது குறித்த நபரை நரகத்தை நோக்கி இழுத்துச் செல்கின்ற விடயமாகும் (நஊதுபில்லாஹி மின்ஹா). ஏனெனில் தான் ஏற்கனவே சரி கண்ட ஒரு விடயத்திலிருந்து ஒருவர் அல்குர்ஆனை அணுகுகின்ற போது, அவர் தனது கருத்தையும் நிலைப்பாட்டையும் நியாயப்படுத்துவதற்காக அல்குர்ஆனைப் ‘பயன்படுத்துவார்’ (கவனிக்கவும்: பயன்படுத்துவார்). எனவே இந்த இடத்தில் அவர் அல்குர்ஆன் அருளப்பட்ட நோக்கமான ‘வழிகாட்டுதல்’ என்ற விடயத்தை அவர் தட்டிக் கழிக்கிறார். அதாவது அல்குர்ஆனிடம் தன்னை ஒப்படைத்து அல்குர்ஆனால் வழிகாட்டப்படுவதற்குப் பதிலாக, தான் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் தெரிவு செய்து கொண்ட ஒரு வழியில் தொடர்ந்தும் பயணிப்பதற்கு அல்குர்ஆனைப் பயன்படுத்துகின்ற நிலைக்கு அவர் சென்று விடுகிறார். வேறொரு வார்த்தையில் சொன்னால் அல்குர்ஆன் சொல்கின்ற பாதையில் செல்வதற்குப் பதிலாக தான் போகின்ற பாதையை நியாயப்படுத்துவதற்காக அல்குர்ஆனை அழைத்துச் செல்கிறார். ஏன் இந்த நபருக்கு நரகத்தைக் கொண்டு அந்த ஹதீஸில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை இப்போது இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படியென்றால் அல்குர்ஆனை அணுகுவது எப்படி?

தனது கருத்தின் பிரகாரம், மனோநிலையின் பிரகாரம், சார்பியங்களின் பிரகாரம் அல்குர்ஆனை அணுகக் கூடாதென்றால் அதற்கு மாற்றமான முறையில்தான் ஒருவர் அல்குர்ஆனை அணுக வேண்டும் என்பது தெளிவாகின்றது. அதாவது அல்குர்ஆனை அணுகுகின்ற ஒருவர் தனது உள்ளத்துக்கு தனது கருத்துக்களிலிருந்தும், நிலைப்பாடுகளிலிருந்தும் முதலில் (தற்காலிகமாகவேனும்) விடுதலை கொடுக்க வேண்டும். தனது கருத்துக்கு ஆதாரம் தேடும் மனோநிலையுடனல்லாது, அல்குர்ஆனிலிருந்து தனக்கான கருத்தையும் நிலைப்பாட்டையும் வடிவமைக்கும் எண்ணத்தோடு ஒருவர் அதனை அணுக வேண்டும். வேறொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் Free Mind உடன் ஒருவர் அல்குர்ஆனை அணுக வேண்டும்.

மனித அறிவு என்பது ‘சிந்தனை’யுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். அல்குர்ஆனின் மீது அறிவைப் பிரயோகிப்பதென்பதன் அர்த்தம் அல்குர்ஆனின் ஆயத்துகளைப் பற்றி சிந்திப்பதாகும். அல்குர்ஆனின் ஆயத்துக்கள் ஒவ்வொன்றும் அற்புதம் என்பது எமது ஈமான். அதனைப் பற்றி எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்கின்ற போது அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலை ஒவ்வோர் ஆயத்தும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் தூதரைக் கொல்ல வேண்டும் என்று வந்தவர், அல்லாஹ்வின் தூதர் மரணித்து விட்டார் என்று யாராவது சொன்னால், சொன்னவரைக் கொன்று விடுவேன் என்று சொல்கின்ற நிலைக்கு மாறியது அற்புதமில்லையா?! அல்குர்ஆன் ஆயத்துக்கள் இது போன்ற பல லட்சக் கணக்கான அற்புதங்களை நிகழ்த்தியிருக்கின்றன. ஒவ்வொரு ஸஹாபியும் ஒவ்வோர் அல்குர்ஆன் ஆயத்தினது அற்புதத்தின் வெளிப்பாடுகள்தான்.

அல்குர்ஆனை தூய்மையான, கலப்படமற்ற சிந்தனையோடு (அறிவோடு) அணுகுவதன் விளைவு அது. அதன்போது பிறக்கும் விளக்கங்கள் உலகை மாற்றும் வல்லமை கொண்டவையாக இருக்கும். அவ்வாறான விளக்கங்கள் பலரின் நேர்வழிக்குக் காரணமாக மாறி விடும், பலரின் கண்களைத் திறந்து விடும்.

ஒரு மனிதன் அல்குர்ஆனை அணுகும் போது, அவனது (طبيعة) இயல்புகள் அதில் செல்வாக்குச் செலுத்துவது தவறு கிடையாது. ஏனெனில் அந்த இயல்புகளை அவனில் வைத்துப் படைத்தவன் அல்லாஹுத் தஆலாதான். உதாரணமாக இயல்பிலேயே அதிகம் வெட்க உணர்வுள்ள ஒருவர் அல்குர்ஆனை சுதந்திரமாக அணுகுகின்ற போது பிறக்கும் விளக்கங்களில் அவரது இயல்பின் சாயல்கள் வெளிப்பட்டிருக்கும், அதில் தவறுகள் ஏதும் கிடையாது. அவ்வாறே இயல்பிலேயே துணிச்சலான ஒருவர் அல்குர்ஆனை அணுகுகின்ற போது பிறக்கும் விளக்கங்களில் அவரது இயல்பின் சாயல் தென்படும். அந்த வகையான விளக்கங்கள் அந்தந்த இயல்புள்ள மனிதர்களுக்கு அதிகம் பொருந்தி வரக் கூடியதாக இருக்கும். அது அல்லாஹ்வின் அருளினதும் கருணையினதும் வெளிப்பாடாகும்.

எனவே யாரெல்லாம் முதலில் கூறிய முறையில் அல்குர்ஆனை அணுகுகின்றார்களோ, அவர்கள் பித்அத்தான முறையில் அல்குர்ஆனை அணுகுகிறார்கள். அவர்கள் வழிகாட்டலைப் பெறுவதற்குப் பதிலாக அல்குர்ஆனைப் பயன்படுத்துகிறார்கள், அதன் விளைவாக வழிதவறிச் செல்கிறார்கள்.

யாரெல்லாம் இரண்டாவதாக சுட்டிக் காட்டியுள்ளதன் பிரகாரம் அல்குர்ஆனை அணுகுகின்றார்களோ, அவர்கள் அல்குர்ஆனிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவார்கள், மட்டுமல்ல அவர்கள் நபியவர்கள் காட்டித் தந்த ஸுன்னத்தான வழிமுறையில் அல்குர்ஆனை அணுகியதற்கான நன்மையையும் பெற்றுக் கொள்வார்கள்.

நாங்கள் எப்படி அல்குர்ஆனை அணுகுகிறோம்?!
அதனை தத்தமது கருத்துக்கேற்ப தாம் சரி என்பதை ஆதாரப்படுத்த பயன்படுத்துகிறோமா? அல்லது அல்குர்ஆனிடம் எம்மை ஒப்படைத்து சுதந்திரமான சிந்தனைக்கூடாக வழிகாட்டலைப் பெற்றுக் கொள்கிறோமா?

இக்கேள்விகளுக்கான உண்மையான, நேர்மையான பதில்கள் எமது மறுமையைத் தீர்மானிக்க வல்லவை என்பது மறுக்க முடியாத உண்மை என்பது மட்டும் தெளிவு.

ஷேக் அஃபான் அப்துல் ஹலீம்