மிகப்பெரிய அசாதரமான சூழ்நிலையில் நாமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.எங்கும் இறப்பு செய்திகள் ஒலித்த வண்ணமிருக்கிறது.கடந்த ஒரு வருடமாக மனச்சோர்வு நம் பணிகளையும்,சந்தோஷங்களையும் முடக்கியிருக்கிறது.”இதுவும் கடந்து போகும்” என்று பயணப் படுபவர்களும் உண்டு. “என்னத்த சொல்ல” என்று நிந்திப்பவரும் உண்டு.
காலமும் கடந்து சென்றுக் கொண்டேயிருக்கிறது.சிலர் இதனை முன் வினைப்பயன் (karma) என்றனர்.சிலர், உலகம் அழிவதற்கான அத்தாட்சி என்றனர்.இன்னும் நிறைய நிறைய பேச்சுக்களும்,உரையாடல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
ஆனால் அல்லாஹ்வை இறைநம்பிக்கை கொண்டிருக்கும் ஓர் இறைநம்பிக்கையாளன் இது என் இறைவனிடமிருந்து வந்தது என நிதானமாய்த் தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொள்கிறான்,இறை சார்பை மேற்கொள்கிறான். இதனைத்தான் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் ஒரு இறைநம்பிக்கையாளனின் காரியம் ஆச்சரியமானது என்று சொன்னார்கள்.
உலகில் பல பேரிடர்கள்,அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கவே செய்கின்றன.இது இவ்வுலகின் நியதிகளில் உண்டான ஒன்று.சோதனை களமாகத்தான் இறைவன் இவ்வுலகை அமைப்பாக்கியிருக்திறான்.இத்தகைய நியதிகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?அல்லாஹ் கூறுகிறான்:
“اَوَلَا يَرَوْنَ اَنَّهُمْ يُفْتَـنُوْنَ فِىْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ
ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ இரு முறையோ அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை; நல்லுரை பெறுவதும் இல்லை!
(அல்குர்ஆன் : 9:126)
“وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّيِّاٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ”
மேலும் இன்ப துன்ப நிலைகளுக்கு ஆளாக்கி, அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தோம்; அவர்கள் (நல்வழியின் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக!
(அல்குர்ஆன் : 7:168)
இந்த இரு வசனங்களும் இறைவனின் பக்கம் மீளும்,கவனம் கொள்ளும் போக்கையே உலக மக்களிடம் இத்தகைய அனர்த்தங்கள்,பேரிடர்கள் வேண்டி நிற்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றது.ஆனால் சோதனையான காலகட்டத்தில் மனிதனின் உள்ளமும்,அறிவும் இதனையெல்லாம் யோசிக்க தலைப்படாது. ஒரு விஷயத்தின் வெளிப்புறத்தை மட்டுமே பார்ப்பது மனிதனின் இயல்பில் உண்டானதொரு விஷயம்.மனிதன் எந்தவொன்றையும் வெளிப்புறத்தை மட்டும் கவனித்து இது ரஹ்மத்துக்கு முரணான ஒன்று என முடிவு செய்துவிடுகிறான்.உள்ளார்ந்து ஒன்றைக் குறித்து யோசிப்பதில் மனிதன் எப்போதும் பின்னடைவிலேயே இருக்கிறான்.
ألذي أحسن كل شىء خلقه
“அவன் படைத்த ஒவ்வொன்றையும் அழகாகவே படைத்திருக்கின்றான்”
என்ற வசனத்திற்கு உஸ்தாத் பதீயுஸ்ஸமான் ஸயீத் நூர்ஸி(ரஹ்) விளக்கமளிக்கும்போது எல்லா விஷயங்களிலும் நலவுகள் உள்ளது.ஏன்?
அசிங்கமாகவும்,தீங்காகவும் உள்ளதென நினைக்கத் தோன்றும் விஷயங்களிலும் கூட ஒரு நலவும்,அழகும் இருக்கிறதென கூறுகிறார்.
அந்த அழகுகள்:
1.தன்நிலை அழகு(பார்க்கும்போதே அழகாக இருப்பது)
2.சார்புநிலை அழகு(அதன் விளைவால் ஏற்படும் அழகு)
இயல்பிலேயே ஒரு விஷயம் சீரற்றவையாக தோன்றலாம் ஆனால்,அதனையெல்லாம் தாண்டி சென்று யோசித்தால் கண்ணைக் கவரும் அழகுகள் இருக்கத்தான் செய்கிறது.
ஆம்,வசந்த கால மழை,சூறாவளி போன்ற
அனர்த்தங்களின் விளைவாக பூமியில் தாவர வளர்ச்சியும்,செழிப்பும் இருக்குமென கூறப்படுகிறது.இதுபோன்றே நிலநடுககம், தொற்றுநோய் போன்றவற்றிற்கு பின்னாலும் கூட நலவுகளும், மாற்றங்களும் குவிந்திருப்பதாத கூறப்படுகிறது.
மாற்றமின்மை அடிப்படையில் ஒரு சூன்யமும்,தீங்குமாகும்.இயக்கம்,மாற்றம்,ஓட்டம் என்பன அடிப்படையில் ஒரு நலவாகும்.உஸ்தாத் பதீயுஸ்ஸமான் ஸயீத் நூர்ஸி(ரஹ்) அழகியதொரு உதாரணத்தை கூறுகிறார்:ஒரு தேர்ச்சி மிக்க கலைஞர் கூலிக்கு பகரமாக உன்னை ஒரு மாடலாக தெரிவுசெய்கிறார்.பின்னர் தான் வடிவமைத்த அற்புத கலையம்சம் கொண்ட ஆடையை உனக்கு அணிவிக்கிறார்.தனது தேர்ச்சியை முழுமையாக தேர்ச்சிப் பெற செய்வதற்காக சில கூட்டல்,குறைத்தல்.மேலும் உன்னை நிமிர்த்தவும்,அமர்த்தவும் செய்கிறார் எனில் இது தொந்தரவாக அமையுமா?நிச்சயம் இல்லை.அவ்வாறே, முல்க் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்குரியது.அவனே அதனை நேர்த்தியாக நிர்வகிப்பான்.
முஸீபத் என்பதை இன்று பலரும் தவறாகவே விளங்கியிருக்கின்றனர்.முஸீபத் ரஹ்மத்திற்கு முரணானது,சாபத்திற்குரியது என்பதாக கருதுகின்றனர்.நபி(ஸல்) கூறினார்கள்:
“من يريد الله به خيرا يصب منه”
ஒருவருக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால்,அவனைச் சோதிப்பான்”.
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் சோதிப்பான் என்பதற்கு பயன்படுத்தியிருக்கும் “யுஸிப்”(يصب) என்ற வார்த்தையும் கூட முஸீபத் என்ற பதத்திலிருந்து வந்ததே.எனவே முஸீபத்தை ரஹ்மத்திற்கு முரணானதாக கருதாமல் ரஹ்மத்திற்கு இழுத்துச் செல்லும் என்ற ஆழமான சிந்தனை இன்று தேவையிருக்கிறது.
முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நொடிப்பொழுதும் அல்லாஹ்வையே சார்ந்திருந்தார்கள்.துன்பம்,துயரம்,இன்பம் என அனைத்தையும் இறைவனிடம் மீளச் செய்தார்கள்.அதன் காரணமாகவே இறைவனையே சார்ந்திருக்கும் ஒரு சமூகத்தையும் உருவாக்கினார்கள்.மழை பெய்யாவிடின் கூட இறைவனிடம் மீண்டு மழைக்காக வழிபாடு செய்து பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்..இன்று உலக அளவில் சடவாத சிந்தனையின் காரணமாக சகல விஷயங்களையும் இறைவனின் பக்கம் மீட்டிப் பார்க்கும்,இறைவனையே சார்ந்து நிற்கும் பண்பு குறைந்துக்கொண்டே வருகிறது. புலவயப்படும் காரணங்களுக்கு அப்பால் மறைந்திருக்கும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளை மறப்பதும்,மறுப்பதும் பெரும்பாவம்.
நபி(ஸல்) அவர்கள் மனிதனை இறைவனோடு தொடர்பு படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.தொடர்ந்து காரண காரியங்களுக்கு அப்பால் உள்ள கர்த்தாவை உணரவும்,உணர்த்தவும் செய்துகொண்டேயிருந்தார்கள்.சடவாத நாகரிகத்தின் பண்புதான் இத்தகைய எண்ணம் கொள்ள செய்வதிலிருந்து நம்மை தூரப்படுத்துகிறது.காலனியம் தன் சுரண்டலை மேற்கொண்ட இடங்களிலெல்லாம் இந்த சடவாத சிந்தனையை பரவச் செய்திருக்கிறது.குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலும்,முஸ்லிம்களின் மனங்களிலும்.
முஸ்லிம்கள் இத்தகைய பண்பை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வுலகில் மனிதன் வாழும் வரை சோதனைகள் தீரப் போவதில்லை.இத்தகைய நிலைகளில் நாம் இறைவனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.இதன் காரணமாக நாம் இறைவனை வெகு சிறப்பாக சாட்சிப்படுத்த முடியும்.
மாற்றங்களை வேண்டி நிற்போம்,நலவுகள் பிறக்கும்.நலவுகள் தாமதிக்கலாம்.ஆனால் நிச்சயம் கைக்கொள்ளும்.
உடனடி தீர்வை எதிர்பார்த்திருப்பது மனிதனின் இயல்பில் உண்டானதொரு விஷயம்.வெற்றி,இலாபம்,இன்பம்,பணம் என அனைத்திலும் மனிதனின் இயல்பு உடனடி தீர்வை எதிர்பார்த்துப் பரபரப்புடனே இருக்கிறது.ஆனால் சில நேரங்களில் இம்மாதிரியான எண்ணம் நம்மை நிராசையிலும்,முடக்கத்திலும் தள்ளிவிடும் என்பதே மெய்.
மனிதனுக்கு புலவயப்படாத சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன என்பதை முதலில் மனிதன் ஆழமாக நம்பவேண்டியிருக்கிறது.அல்லாஹ் இப்படியொரு நியதியை செய்திருக்காவிட்டால் மனிதனின் வாழ்வென்பது யத்தனபோக்கு அற்றதாகவே ஆகியிருக்கும்.
மனிதனின் வாழ்வை அழகாக்குவதில் முயற்சிக்கும்,கடின உழைப்பிற்கும் பெரும் பங்குண்டு.
ஏனெனில்,வாழ்வு ஓர் எல்லையுடன் நிற்பதில்லை நாளுக்குநாள் மாற்றங்கள்,தேவைகள் என நிகழ்ந்துக் கொண்டேயிருக்கின்றன.மாற்றத்திற்கும் தேவைக்கும் மனிதனின் யத்தனங்களோடு சேர்ந்து எண்ணங்களுக்கும் பங்கு இருப்பதாகவே நினைக்கிறேன்.எண்ணங்கள்தானே செயலுரு பெறுகிறது.
அல்லாஹ்வும் இப்படிப்பட்ட நலவின் மீது எதிர்பார்ப்புக் கொண்ட மென்போக்கையே சமூகத்தில் விரும்புகிறான்.குர்ஆனில் பலவகையான வசனங்கள் எதிர்காலத்தை மையப்படுத்தியே மனிதனை ஆற்றுப்படுத்துகிறது.
நபிகளாரின் வாழ்வும் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு பண்பினாலேயே அலங்கரிக்க பட்டிருப்பதை நம்மால் காண இயலுமாய் உள்ளது.நல்ல தீர்வை எதிர்பார்த்திருப்பது மிகச் சிறந்த வழிபாடே..!
நபி(ஸல்) கூறினார்கள்:
إن عظم الجزاء مع عظم البلاء.
“கூலியில் மகத்தானது கடும் சோதனையுடன் உள்ளதாகும்”.
–முஹம்மத் அலி, மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர், sio தமிழ்நாடு


