மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இஸ்லாமிய அறிஞர், ஆய்வாளர், இஸ்லாத்தைப் புரட்சிகரமான சித்தாந்தமாக முன்வைத்த மறுமலர்ச்சி நாயகர். காலணியாதிக்கம் தோற்றுவித்த மேற்கத்திய மோகமும், தேசியவாதமும் முஸ்லிம் உலகை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தியிருந்த சமயம், பொருளாயதச் சிந்தனையும் மேற்கத்தியக் கலாச்சாரமும் முஸ்லிம்களை ஆன்ம பலமற்றவர் களாக மாற்றியிருந்தது. சிந்தனை ரீதியிலான சிறையில் முஸ்லிம்கள் அகப்பட்டிருந்தனர். இஸ்லாத்தின் மீதான பற்றுறுதி முஸ்லிம்களிடம் ஆட்டங்காண ஆரம்பித்திருந்தது. இஸ்லாத்தை முழு வாழ்வையும் தழுவிய வாழ்க்கை நெறியாகவோ, புரட்சிகர கொள்கையாகவோ முஸ்லிம்கள் நோக்கத் தவறினர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலேயே மௌலானா மௌதூதி (ரஹ்) இவ்வுலகில் வெளிப்பட்டார்.

பொதுவுடைமைக் கொள்கையிலும் முதலாளித்துவத்திலும் மானிட சமூகம் (முஸ்லிம்கள் உட்பட) தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடி அலைந்தபோது, இஸ்லாத்தை முழுமையான வாழ்கைத் திட்டம் எனவும், இதில்தான் மனிதகுலத்தின் இம்மை, மறுமை வெற்றிகள் அடங்கியிருக்கின்றன எனவும் ஓங்கி முழங்கினார். இவ்வாறு முதலாளித்துவம் VS பொதுவுடைமைவாதம் என இருமையாய் இருந்த தீர்வு வட்டத்தை நிராகரித்து, இஸ்லாம் ஒன்றே தீர்வு என்று ஆதாரப்பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் நிறுவினார். கீழைத்தேய ஆய்வாளர்கள் (Orientalist) மதங்களைக் குறித்து ஆய்வு செய்வதாகக் கூறி அவற்றைப் பிற்போக்குத் தனமான, நிலவுடைமைச் சமூகத்தின் கூறாக நிறுவியதோடு மேற்கத்திய சமூகத்தின் மதச்சார்பற்ற கோட்பாட்டையும் வாழ்கைமுறையையும் நாகரிக சமூகத்தின் குறியீடாக நிலைநிறுத்த முயன்றனர். மௌதூதி மேற்குலகின் ஆக்கப்பூர்வமான கருத்துக் களை கண்மூடித்தனமாக நிராகரிப்பவறல்லர்; அதேசமயம், மனிதகுலத்துக்கு அது வழங்கும் சித்தாந்தங்களையும் வாழ்வியலையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரித்தார். அது தோற்றுவித்த தீமைகளையும் சீரழிவுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

மௌதூதி முஸ்லிம்களை திருக்குர்ஆனின் கட்டளைகளையும் நபிகளாரின் முன்மாதிரியையும் ஏற்றுக்கொண்டு தமது வாழ்வை இஸ்லாமிய வழியில் அர்ப்பணிக்க முன்வருமாறு அறைக்கூவல் விடுத்தார். மானுட விடுதலை இஸ்லாத்திலேயே இருப்பதால், நபியாரின் (ஸல்) தூதுத்துவப் பொறுப்பைச் சுமந்த சமூகமான முஸ்லிம்கள் நபியினது வழியைப் பின்பற்றி இப்பூமியில் இஸ்லாமிய வாழ்க்கை அமைப்பை நிலைநாட்டுவது கடமை எனச் சொன்னார். தனிநபர் சீர்திருத்தம் மட்டுமின்றி குடும்பம், கல்வி, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கலை, பண்பாடு என எல்லாத் துறைகளையும் இஸ்லாமிய அடிப்படையில்
மறுக்கட்டமைப்புச் செய்வதே “இகாமத்துத்தீன்” என்றார். இப்பணியைச் செய்வதற்கு அதிகாரத்தை இன்றியமையாததாகக் கருதிய மௌதூதி, இஸ்லாமிய அரசுதான் நம் இலட்சியம் என முழங்கினார். அதனை நோக்கி பயணிக்க ஜமாஅத்தே இஸ்லாமி எனும் பேரியக்கத்தையும் நிறுவினார்.

20 மற்றும் 21ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மௌலானா மௌதூதி (ரஹ்) இஸ்லாமிய மீள்எழுச்சியின் நாயகனாக இன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார்.

அவரது காலம் போலவே இன்றும் மேற்கின் பிடி உலகம் முழுவதும் கடுமையாக உள்ளது. முஸ்லிம்கள் (குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள்) மேற்குலக மோகத்திலும், அது உருவாக்கும் உளக் களிப்பிலும் தங்களது வாழ்வை வீணடிக்கின்றனர். இன்று இளைஞர்கள் மத்தியில் இறை மார்க்கம் அதன் புரட்சிகரத் தன்மையை இழந்து நிற்கிறது. இஸ்லாமிய இயக்கத் தோழர்கள் பலரும் இதில் விதிவிலக்கல்ல. இந்நிலையிலேயே மௌலானா மௌதூதி நமக்கு அதிகமதிகம் தேவைப்படுகிறார். இஸ்லாமிய இயக்க வட்டத்திலும்கூட அவரின் எழுத்துகள் போதிய அளவு வாசிக்கப்படாத ஒரு சூழலில்தான் SIO தமிழ்நாடு “மௌதூதியைக் கற்போம்” என்கிற பரப்புரையைத் தொடங்கியது. அது ஏதோ மௌதூதி என்ற தனிநபர் துதிப்பாடலுக்கான பரப்புரையல்ல. தன் வாழ்வு முழுக்க இஸ்லாத்தை இப்பூமியில் நிலைநிறுத்த பாடுபட்ட ஒரு முஜத்திதின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ளும் முயற்சி. இம்மாதிரியான முயற்சிகள் பரவலாக முஸ்லிம் சமூகத்தில் நடைப்பெற வேண்டும்.

இறுதியாக, மௌதூதியை கற்போருக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். மெளதூதி(ரஹ்) அவர்களின் கருத்துகளைப் படிக்கும்போது திறந்த மனதுடன் முழுமையாக அதனை உள்வாங்குவது அவசியம். விமர்சன அணுகுமுறையோடு கற்கிறேன் என்கிற பெயரில் அவருடைய கருத்துகளை விட்டும் உங்கள் இதயத்தை தூரமாக்கிக் கொள்ள வேண்டாம். விமர்சனக் கண்ணோட்டத்தைப் பின்னர் வளர்த்துக் கொள்ளலாம். மௌதூதி மீது முன்முடிவுகளும் தப்பெண்ணங்களும் உலாவரும் இன்றைய சூழ்நிலையில் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது. அல்லாஹ் அந்த பேராளுமையின் பங்களிப்பை முழுமையாக ஏற்பானாக! அவரை உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நுழையச் செய்வானாக!

M. முஹம்மது அஸ்லம்,B.E., M.A