19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவர் மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). தெற்காசியப் பகுதிகள் மட்டுமின்றி, அந்தப் பேராளுமையை அரபுலகமும் மேற்குலக நாடுகளும்கூட கொண்டாடுகின்றன. பத்திரிக்கையாளராய், ஆகச் சிறந்த சொற்பொழிவாளராய், 140 புத்தகங்களுக்கும் மேல் புத்துலகிற்குப் படித்துக் கொடுத்த மாபெரும் அறிஞராய் மௌதூதி விளங்குகிறார். இவை எல்லாவற்றையும்விட இஸ்லாத்தை நடைமுறையில் ஒரு வாழ்க்கைத் திட்டமாய், சமூகக் கோட்பாடாய் புரியவைக்கவும், அதனடிப்படையிலான ஒரு சமூக மாற்றத்திற்கு துணைச்செய்யவும் ஒரு மாபெரும் இஸ்லாமிய இயக்கத்தை தம் வாழ்நாளிலேயே கட்டமைத்த ஒரு சாதனையாளராய் மின்னுபவர் மெளலானா மௌதூதி (ரஹ்) அவர்கள்.

இத்தகு ஆளுமையின் ஆய்வு நோக்கிலான தரமான நூல்களில் ஒன்றுதான் ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்’ எனும் நூல். மௌலானா தாம் ஆசிரியராயிருந்து நடத்திவந்த ‘தர்ஜிமானுல் குர்ஆன்’ பத்திரிகையில் ‘குர்ஆன் கி சார் புன்யாதி இஸ்திலாஹைன்’ என்ற தலைப்பில் திருக்குர்ஆனின் ஆதாரச் சொற்களாய் அறியப்படும் இலாஹ், ரப், தீன், இபாதத் ஆகிய நான்கு சொற்களுக்கான பொருள்விளக்கத் தொடர்க்கட்டுரையே பின்நாளில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதே தலைப்பில் முதலில் உர்துவிலும் பின்னர் அது அரபி மற்றும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நூல் நான்கு அத்தியாயங்களோடும், ஒரு முகவுரையோடும் தமிழில் வெளிவந்துள்ளது. ஆங்கில மொழிப்பெயர்ப்பில், மேலதிகமாக, மௌலானா மௌதூதி (ரஹ்) தமது திருக்குர்ஆன் விரிவுரை நூலான “தஃப்ஹீமுல் குர்ஆன்”-க்கு எழுதிய குர்ஆன் அறிமுக வாசகங்களோடு வெளிவந்துள்ளது.

இந்நூலில் மெளலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய போதனை/கண்ணோட்டம் குறித்தும், இறைவனின் இறுதி வேதமான குர்ஆன் குறித்தும் காலங்காலமாய் மக்கள் மனதில் படித்துள்ள கறைகளை ஆரம்பமாய் அகற்ற முயல்கின்றார்.

தாம் எடுத்துக்கொண்ட இந்த நான்கு சொற்களுக்குமான விளக்கத்தை திருக்குர்ஆன் வசனங்களிலிருந்தும், அரபு மொழி அகராதியிலிருந்தும் மட்டுமே விளக்க முற்பட்டிருப்பது ஒன்றே அவரது நேர்மைக்கும், சார்பின்மைக்குமான பெரும் சான்றாய் மிளிர்கிறது.

படைத்தவனும் (இலாஹ்), பரிபாலிப்பவனுமான (ரப்) அல்லாஹ்விற்கும், குர்ஆனிய போதனைகளின் அடிப்படையிலும், அவன் காட்டித்தந்த வாழ்வியல் முறைமைகளின் (தீன்) அடிப்படையிலும், வாழ்வு வழங்கப்பட்டிருப்பதற்கான அடிப்படை நோக்கமாகிய வழிபாட்டிற்கும் (இபாதத்) தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் முனைப்பு கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் நிச்சயம் ஒரு வழிகாட்டி (Guide) என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

நூல் விவாதிக்கும் நான்கு ஆதாரச் சொற்களுக்கான பொருள்கோடல் காலவோட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் மாறிப்போய் தவறாகப் புரிந்துகொள்ளப்பட நேர்ந்ததை மௌதூதி (ரஹ்) நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

இறைவன் என்றால் அதற்குப் பொருள் என்ன? அதிபதி என்பது யாரைக் குறிக்கிறது? என்பனவற்றை அரேபியாவில் குர்ஆன் இறங்கியபோது ஒவ்வொருவரும் அறிந்தே இருந்தனர். ஏனெனில் இச்சொற்கள் அவர்களின் அன்றாட பேச்சு வழக்கில் கலந்திருந்தன. அந்தச் சொற்கள் எந்தப் பொருளில் பயன்படுத்தப் படுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

அதேபோல இபாதத், தீன் ஆகிய சொற்களும் தொடக்கத்தில் இருந்தே அவர்களுடைய பேச்சு வழக்கில் கலந்திருந்தன. “நூற்றாண்டுகள் செல்லச்செல்ல, படிப்படியாக இச்சொற்களின் விரிவான பொருள்களிலிருந்து விலகி, ஒரேயடியாகக் குறுகிய, தெளிவற்ற அர்த்தங்கள் கற்பித்துக் கொள்ளப்பட்டன.”

திருக்குர்ஆனின் பெரும்பாலான வசனங்களின் அடிநாதமாய் இருக்கின்ற இந்நான்கு ஆதாரச் சொற்களுக்கும் பிழையான, குறுகிய மற்றும் தவறான புரிதல்கள் ஏற்பட்டதன் விளைவுதான் முஸ்லிம் சமூகம் தான் அடையவேண்டிய படித்தரத்தை இழந்திருப்பதும், முஸ்லிம் தனிநபர் தம் குறிக்கோளை மறந்துபோனதும். நூலின் இறுதியில் வாசகனுக்கு இந்த எண்ணமே ஏற்படும்.

அந்த வகையில் வாசிக்கும் ஒவ்வொரு வாசகரையும் திருமறையின் ஆதாரச் சொற்களுக்கான பிழையான, குறுகிய விளக்கங்களிலிருந்து தெளிவான குர்ஆன் மற்றும் அகராதி அர்த்தப்பாடுகளின் வழி இந்நூல் உறுதிப்படுத்தும் என்பது வெளிப்படை:

நூலடக்கமும், நான்கு சொற்களும்:

1.இலாஹ்:

ஆரம்பமாக மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் இலாஹ் என்ற வார்த்தைக்குரிய அர்த்தத்தை அழகாய் விளக்கு கிறார். தேவைகளை நிறைவேற்றுபவர், ஆபத்தான மற்றும் துயறுற்ற காலங்களில் அபயமளிப்பவர், சஞ்சலம் மிகுந்த வேளைகளில் அமைதியளிப்பவர் என்ற பொருள்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இலாஹ் என்ற இந்த வார்த்தை கூடுதலாக, சாத்தியமாக்கித் தரக்கூடிய வலுவும், அதிகாரமும் உள்ளவருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் நூலில் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

இஸ்லாத்திற்கு முந்தைய அரபுச் சமூகத்திடம் இலாஹ் என்ற இந்தச் சொற்பிரயோகம் எந்தந்த அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது? குர்ஆன் இச்சொல்லை எந்த அர்த்தப்பாடுகளோடு முன் வைக்கிறது? என்பதையும் மௌதூதி (ரஹ்) அழகுற விளக்குகிறார். பின், இறைமை, அதிகாரம் எனும் இரு சொற்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதாம் என்றும், இவை தரும் அர்த்தத்தின் அடிப்படையிலும், வார்த்தைக்கான உயிரோட்டத்தைக் கொண்டும் இவ்விரு சொற்களும் தரவிழையும் பொருள் ஒன்றே என ஆசிரியர் நிறுவுகிறார்.

இறைமை என்பது ஆதிக்கம், ஆட்சியதிகாரம் ஆகிய பொருள்களிலும் பயன்படுத்தப்படுவதையும் ‘ஏகத்துவம்’ என நாம் எதைச் சொல்கிறோமோ, அதில் ஆட்சியதிகாரம், முற்றுமுதலாய் ஆதிக்கம் செலுத்துதல் ஆகியனவும் அடக்கம். அல்லாஹ் ஒருவனுக்கே இத்தகுதிகளும் பண்புகளும் இருக்கின்றன. மேலும், இப்பண்புகளில் பங்கு வைப்பதே இணைவைப்பு எனும் பெருங்கொடுமை என்பதை இலாஹ் என்ற இச்சொல்லின் பொருள் மூலம் மௌதூதி (ரஹ்) ஆதாரப்பூர்வமாய் நிறுவுகின்றார்.

  1. ரப்:

ரப் எனும் இச்சொல்லுக்கான அர்த்தத்தை விளக்குகையில் மௌலானா மௌதூதி (ரஹ்) அதன் அகராதிப் பொருள்படி ஐந்து விளக்கங்களை முதலில் நூலில் தெளிவுப்படுத்துகிறார்.

  1. பராமரிப்பவன், தேவைகளை நிறைவேற்றித் தருபவன், வழிமுறைகளையும், வளர்ச்சியையும் தருபவன்,
  2. பொறுப்பாளன், கண்காணிப்பவன், வளர்த்து ஆளாக்குபவன், சீர்த்திருத்தம் செய்பவன்.
  3. மையத் தகுதியுடைவன்.
  4. கீழ்படிய வைப்பவன், தலைவன், அதிகாரம் கொண்டவன்.
  5. அதிபதி, எஜமானன்.

இவ்விளக்கங்களுக்குப் பிறகு அறியாமைக்கால மக்களிடம் இச்சொற்களுக்கான பொருள் எவ்விதம் தவறான அர்த்தத்தில் பயன்பாட்டில் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, மௌலானா மௌதூதி (ரஹ்) பல்வேறு குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் ரப் என்பதற்கான அசல் பொருளை பின்வருமாறு பதிவு செய்கிறார்;

  1. ஆட்சியதிகாரம், சட்டவிதிகள், வரம்புகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் உடையவன் எவனோ அவனே ரப் எனும் தகுதியுடையவன்.
  2. அல்லாஹ் ஒருவனே வல்லமை மிக்கவன்.
  3. அவனே அனைத்துலகின் படைப்பாளன், முழுமையான – வல்லமைமிக்க அரசனுக்கரசன்.
  4. அனைத்து படைப்புகளின் மீதும் முழுமையான ஆதிக்கம் செலுத்த முடியுமான ஒரே அதிபதி.
  5. மிகக்குறிப்பாய், மனிதனை அவனே படைத்தான்; அவன் படைத்த பூமியில் அவனுக்கு கீழ்ப்படிந்தவனாய் வாழ வேண்டும் என்பதற்காக.

மேற்சொன்ன பண்புகள் அல்லாஹ்வினுடையதாக குர்ஆன் பதிவு செய்கிறது. மேலும், வணங்குவதற்குத் தகுதியான ஒரே நபராக அல்லாஹ் மட்டுமே விளங்குகின்றான். ஏகத்துவத்தின் ஒரு பாகமான இந்த ‘வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே’ என்பதுதான் யதார்த்தத்தில் ‘ரப்ஆக இருப்பதன் சாரம்சம் என்பது இந்நூலில் மௌதூதி (ரஹ்) எடுத்தாளுகின்ற குர்ஆனிய வசனங்களின் அடிப்படையில் நமக்கு ஏற்படும் தெளிவு.

3.இபாதத்:

மௌலானா மௌதூதி (ரஹ்) இபாதத் குறித்து மூன்று கோணங்களில் இந்நூலில் அலசியுள்ளார். அவை வழிபாடு. கீழ்படிதல் மற்றும் கட்டுப்படுதல். வணக்கம்.

சொற்பொருளின் இம்மூன்று விளக்கங்களின் படி, இபாதத் என்பது வெறுமனே சடங்குபூர்வமான சில நடவடிக்கைகளில்/ செயல்பாடுகளில் ஈடுபடுவதன்று. மாறாக அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ‘விசுவாசமாய்’ இருப்பதற்கான மூலப்பொருளாக, அவனுக்கு கட்டுப்பட்டு, கீழ்ப்படிந்து, அவனது விருப்பதிற்கு இசைவாக நடப்பதையே இலட்சியமாகச் கொண்டு ஒழுகுவதே இபாதத் என்பதற்கான சரியான பொருளாய் இருக்க முடியுமென நிறுவுகிறார் மௌலானா மௌதூதி (ரஹ்).

அல்லாஹ் ஒருவன் மாத்திரமே கட்டளைகளைப் பிறப்பிக்கும்
உரிமை உள்ளவனாக இருக்கின்றான். கூடவே, தனக்குக் அடிபணியும்படியும், தனது விருப்பங்களுக்கேற்ப நடக்கும்படியும், தனக்குச் சேவையாற்றும்படியும் மனிதனிடம் கட்டளையிடுவதற்கான முழு தகுதியும் உள்ளவனாக மனிதனைப் படைத்த அல்லாஹ் மாத்திரமே இருக்கின்றான். இந்த வகையில்தான் அல்லாஹ்வினுடைய சட்டத்திட்டங்களைப் புறத்தள்ளிவிட்டு, மனிதச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது குர்ஆனிய கண்ணோட்டத்தில் இறைவனுக்கு மாறு செய்வதாகவே கருதப்படுகின்றது.

எனவேதான் திருக்குர்ஆன் கூறுகின்றது: எந்த வகையில் வணக்க – வழிபாடு என்பதைச் சொன்னாலும், அதை அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே என ஒருமைப்படுத்துவதும், தாகூத்துக்கு (இறைவரம்பு மீறிய செயல்களுக்கு) ஒருபோதும் அடிபணியாததும் கூட இபாதத் எனும் பொருளில் வருபவை என.

  1. தீன்:-

தீன் எனும் இச்சொல் பலபொருள் தரும், விரிவான அர்த்தமுடைய சொல். அதிகாரம் கொண்டவரால் செயல்படுத்தப்படும் தண்டனை, அதிகாரத்திற்குரியவரது சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைமைகள், கீழ்ப்படிதல், அரசதிகாரம், கணிப்பு, தீர்ப்பு என பல விளக்கங்களோடு பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொல் தீன் என்பதாகும்.

மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தழுவிய ஒரு வாழ்க்கைநெறியாக இஸ்லாம் இருக்கின்றது. அந்த அடிப்படை யிலேயே மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள், பள்ளிவாசலில் தொழுகை நேரத்திற்கு செய்யும் வணக்கம் மட்டுமே வணக்கமல்ல, மாறாக ஒருவன் தனது தனிப்பட்ட, சமூக வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இறைநெறிக்கு உட்பட்டு நடப்பதற்கான பெயரே இபாதத் வணக்க வழிபாடு என்றும், இந்த வகையில் தீன் என்பது முழுமையாக அல்லாஹ்விற்கு மாத்திரமே உரியது என்றும் கூறுகிறார். எனவே, சட்டவிதிகள், சமூக வாழ்வு, பொருளாதாரத் திட்டங்கள், அரசியல் என வாழ்வின் எந்தத் துறையிலும் எள்ளளவும் மனிதச் சட்டங்களுக்கு இடந்தராது முற்றாக இறை வரம்பிற்குட்பட்ட நடவடிக்கைளின் பெயரே ‘வணக்க வழிபாடு – இபாதத்’ என குர்ஆனின் நிழலில் “தீன்” குறித்த கண்ணோட்டத்தை இங்கு விளக்குகிறார்.

இபாதத், இலாஹ், ரப், தீன் ஆகிய இச்சொற்களின் வழியாக வல்லமையும், அதிகாரமும் முற்றுமுதலாக அல்லாஹ் ஒருவனிடம் மாத்திரமே உள்ளன என்பதை குர்ஆனின் மூலம் மௌதூதி (ரஹ்) நமக்கு உணர்த்திக் காட்டுகிறார். இவ்வுலகிலுள்ள எதுவும் எள்முனை அளவுகூட இத்தகைய இறைமையை பிறருக்கோ அல்லது தனக்கோ கோருவதற்கான அருகதையற்றது என்பதையும் தனது வாதங்களின் வழியாக மௌதூதி (ரஹ்) நிறுவிக்காட்டுக் கின்றார்.

அல்லாஹ் மாத்திரமே இலாஹ் மற்றும் ரப்; வேரெவருக்கும் இத்தகுதிகளோ, பண்புகளோ இல்லை என்பதையும், அதனாலேயே மனிதன் அவனுக்கு மாத்திரமே கீழ்ப்படிந்து தனது இபாதத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதையும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறார். ஒவ்வொரு மனிதனுடைய ‘தீனாக’ இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அமைய முடியும். அதில் யாருக்கும் எவ்விதத்திலும் பங்கில்லை என்பதையும் மௌதூதி (ரஹ்) தம்முடைய இந்நூலில் ஆதாரப் பூர்வமாய் விளக்கியிருக்கிறார்.

நூல் குறித்த விமர்சனங்கள்:

மௌலானா அபுல் ஹசன் அலி நத்வி (ரஹ்), மௌலானா மன்சூர் நூஃமானி (ரஹ்), மௌலானா வஹீதுத்தீன் கான்(ரஹ்) போன்ற அறிஞர்கள் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் இந்நூலுக்கு எதிர்மறையான விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர். அரசியல் கலப்போடு எழுதப்பட்ட நூலொன்றும், மௌதூதி (ரஹ்) மட்டுமே இந்நான்கு சொற்களுக்குமான சரியான பொருளை விளங்கியவரா? என்றும் அவ்விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன. வேறு பலரும் கடுமையாக இந்நூலுக்கு எதிர்மறையான விமர்சனத்தை வைத்துள்ளபோதிலும், மௌலானா சையத் ஹாமித் அலி (ரஹ்) போன்ற அறிஞர்கள் யதார்த்தத்தில் இந்நூல் பேசும் பொருள் குறித்தும், நூலாக்க காரணம் குறித்தும் நேர்விதமான விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

உர்து மொழியில் Dr. உபைதுல்லாஹ் ஃபகத் ஃபலாஹி அவர்கள் இந்நூலின் பேசுபொருள், நூலுக்கான விமர்சனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு தனி நூலையே, “தீனுக்கான விளக்கமும், இந்திய அறிஞர்களும்” எனும் தலைப்பில் எழுதியுள்ளார். வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பாற்பட்டு, இந்நூல் ஆகச்சிறிய அளவில் எனக் கொண்டாலும், நிச்சயம் இந்நூலின் பேசுபொருளான திருக்குர்ஆனின் நான்கு ஆதாரச் சொற்களைக் குறித்து மிக நல்ல புரிதலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறுதியாக, மனிதன், அவனது படைப்பாளன், அவ்விருவருக்குமான தொடர்பு என்ற முக்கோணச் சட்டகத்தில் நின்று நூலின் பேசுபொருள் இயங்குகின்றது. வாழ்வின் நோக்கம், அதன் இறுதி நிலை, இன்றைய சூழல், மனிதனின் அந்தஸ்து என எந்த நிலையில் யோசித்தாலும் இப்புத்தகம் தத்துவ ரீதியிலும், செயற்களத்தை முஸ்லிம்களுக்கு சீராய்ப் புரியவைப்பதிலும், இறைவனின் பக்கம் நம் ஒவ்வொருவரின் பயணத்தையும் எளிதாக்குவதிலும் துணை நிற்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றநிலையில், அது மேலோங்கிட உழைக்கும் அனைவருக்கும் இது ஒரு அடிப்படை அரிச்சுவடி நூல் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.

ஃபக்ருத்தீன் அலீ அஹமத்