உலகில் அடிமைத்தனம் குறைந்துவிட்டது என்றே பலரும் கருதுகின்றனர்.ஆனால்,நம்மை அறியாமலே பலவகையில் நம்முடைய ஆத்மார்த்தமான ஆசைகளுக்கும்,இச்சைகளுக்கும் அடிமைப்பட்டே கிடக்கிறோம்.இதனை ‘சிந்தனை ரீதியான தாக்கம்’ எனலாம்.

ஏனெனில்,வெளிப்படையில் சுதந்திரமாக தெரியும் இது உள்ளளவில் அப்பட்டமான அடிமைப்படுதலே.இன்றைக்கு இளைஞர்கள்,பெரியவர்கள்,சிறியவர்கள், பெண்கள் என பெருகி ருசிகண்ட பழக்கமாக இருப்பதுதான் போதைபொருள்.

இதனை இன்றைய நவீன உலகின் அடையாளமென கருதும் அளவிற்கு எங்கும் வியாபித்து நிற்கிறது.சுற்றுலாவாக இருக்கட்டும், கொண்டாட்ட நாளாக(celebration day)இருக்கட்டும், பண்டிகை நாளாக இருக்கட்டும் இளைஞர்களுக்கு முதலில் நியாபகம் வருவது மது,புகையிலை,கஞ்சா போன்ற போதைபொருள்கள் தான்.

சென்ற காலங்களில் மதுபானம் மட்டுமே பெரும்பாலும் உபயோகத்தில் இருந்தது.ஆனால் இந்த நூற்றாண்டு வளர்ச்சியின் நூற்றாண்டு நவீனத்தின் நூற்றாண்டு என்று கூறி புதிய வகையான போதைபொருள் தயாரிப்பின் மூலம் மேலும் வீழ்ச்சிக்கே சென்றுகொண்டிருக்கின்றன.இதுதான் உண்மையான வளர்ச்சியா?

மது

மது அருந்துபவர்களில் பெரும்பாலானோர் இதனால் மனநிம்மதியும்,ஆறுதலுமே கிடைக்கின்றது என்று வாதிடுகின்றனர்.ஆனால் உண்மையில் எந்த ஒன்றின் மீதும் அளவுகடந்த ஈடுபாடு கொள்ளும் போது ஒரு விதமான சுகமே வயப்படும்.அப்படியே அடிமையாகவும் ஆக்கிவிடும்.இதுவே உளவியல் அறிஞர்களின் நிலைப்பாடு.

இதிலும் குறிப்பாக இளைஞர்கள் நான் பியர்(bear) மட்டுமே அடிப்பேன் அதில் பாதிப்பு எதுவும் இல்லை என்று சொல்லப்படக்கூடிய அளவிற்கு உள்ளனர்.ஆனால்,அமெரிக்க ஆய்வறிக்கையின் படி பியரிலும் 14 கிராம் அதாவது 5 சதவீத அளவிலான Alcohol சேர்க்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.ஆக, Alcohol யின் கலவையினால் சாதாரண மதுவாக இருப்பினும் சரி bear ஆக இருப்பினும் சரி அனைத்தும் மனித உடலுக்கு ஆபத்து பயக்ககூடியதே.மற்றொரு விதத்தில் Alcohol லே மனிதனை பைத்தியக்கார செயலுக்கு(psycho active)தூண்டுதலாகவும் உள்ளது என கூறப்படுகிறது.இதனையே உலகவரலாற்றில் புகழ்பெற்ற இஸ்லாமிய ஆட்சித்தலைவர் உமர்(ரழி) இவ்வாறு குறிப்பிட்டார்:”அறிவை மழுங்கடிக்க செய்வதே மது”இதனை விட மதுவை குறித்து தெளிவாக சொல்ல தேவையில்லை.

புகை

இன்றைய வியாபாரத்தின் அதிக அளவிலான இலாபத்தை ஈட்டக்கூடிய மற்றொன்றுதான் புகையிலை.மதுவை விட புகையிலை பழக்கத்தில் அதிக அளவிலான ஆபத்து உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.அதுமட்டுமல்லாமல், இந்த புகைப்பழக்கம் ஒரு தீரா நோயாகவும்,பரவும் நோயாகவும் மாறியிருக்கிறது.’புகை நமக்கு பகை’என்பது வெற்று வார்த்தையல்ல பலகுடும்பங்களின் வலி.

இன்னும் கஞ்சா,Hans,போன்ற ஏராளமான போதைபொருள்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் சமூகத்திற்கும்,குடும்பத்திலும்,தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட தீங்குகள் ஏராளம்.

1.போதைப்பொருள்கள் மூலம் ஏற்படும் உடல் வலி,ஆரோக்கிய குறைபாடு, நரம்புத்தளர்ச்சி,மனச்சிதைவு,நற்பண்புகளின் வீழ்ச்சி, கீழ்த்தரமான இச்சை போன்றவை.

2.போதைக்காக பணத்தை வாரி இறைப்பதன் மூலம் வீட்டில் வறுமை,குழந்தைகளின் மீதான கவனமின்மை, விவாகரத்து போன்றவை

3.குறுமதி படைத்தவர்கள் உருவாகுவது,தன்னலத்துடன் செயல்படுவது,விபத்து போன்றவை.

இன்றைக்கு இஸ்லாமிய இளைஞர்களுக்கு மத்தியிலும் இதுபோன்ற விஷயங்களை பரவலாக காணமுடிகிறது.மதுவும்,புகையும் அவர்களின் வாழ்வின் அங்கமாக மாறிப் போயிருக்கிறது.ஆனால்,புகையை குறித்து இன்றைய இஸ்லாமிய இளைஞர்களுக்கு மத்தியில் இவ்வாறான சிந்தனையோட்டமே நிலவுகிறது.அதாவது, புகையிலை இஸ்லாமில் ‌தடுக்கப்பட்டவை(ஹராம்) அல்ல.மாறாக,வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) என்பதுதான் அது.

அவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக விளங்கவேண்டும்.இஸ்லாமிய சட்டத்துறையில் ஒரு பொதுவிதி உண்டு “ஹராமின்(தடுக்கப்பட்டவை) பக்கம் இட்டுச்செல்லும் அனைத்தும் ஹராம்”தான்.இஸ்லாமியச் சட்டத்துறையில் மனித உயிர்களுக்கென்று அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆகவே,மனித உயிரையோ அல்லது அதன் நலனையோ பாதிக்கும் செயல் அனைத்தும் ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகும்.எனவேதான் மது, புகையிலை இன்னும் ஏராளமான போதைபொருள்கள் போன்ற வேகமாகவோ அல்லது மெதுவாகவோ மனித உயிரையோ,நலனையோ பாதிப்புக்கு உள்ளாக்கும் அனைத்தும் ஹராம் (தடுக்கப்பட்டது) என்கிறோம்.

இன்னும் கூட சொல்வதானால் படைப்பாளனாகிய அல்லாஹ்வே இதனை இவ்வாறு கூறுகிறான்.”உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்.”(திருக்குர்ஆன் 4:29) மேலும்,மற்றொரு வசனத்தில்”மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள்”(திருக்குர்ஆன் 2:195) என்றும் கூறுகிறான்.இதிலிருந்து நமக்கு விளங்குவது புகையிலை வெறுக்கத்தக்கது(மக்ரூஹ்)அல்ல தடுக்கப்பட்டதே (ஹராம்)என்று.

இங்கே கவனிக்கத்தக்க இன்னொரு விஷயமும் உண்டு அதுதான் தன்னையும்,தன்சார்ந்த கொள்கைகளையும் எக்காரணம் கொண்டும் கேள்வி கேட்கமுடியாத அளவிற்கு உலக சுகபோகங்கள்,ஆசைகளின் பக்கம் கவனசிதைவு செய்யப்படுகின்றது.அதிலுள்ள ஒரு வழிமுறையே இந்த போதைபொருள்கள்.

மேற்சொன்ன உமர் (ரழி)அவர்களின் கூற்றை மீண்டும் இதனோடு தொடர்பு படுத்தினால் தெளிவெண்ணம் பிறக்கும் “அறிவை மழுங்கடிக்க செய்வதே மது”இதனோடு மற்ற போதைபொருள்களை சேர்த்து பார்ப்பதே சிறந்தது.இத்தகைய ஒரு யுக்தியை பயன்படுத்தியே இன்றைய சிந்தனை யுகத்தில் தன்னுடைய சிந்தனையை குறித்தான அறிவும்,தெளிவும் பெறாத வண்ணம் சமூகத்தை உருவாக்கி, குருட்டுத்தனமான பின்பற்றலையும் ஏற்படுத்துகின்றன.

இதுவே, இஸ்லாமிய சமூகத்திற்கும் நிகழ்ந்தது.ஸ்பெயின் இஸ்லாமிய ஆட்சியில் சிறப்பானதொரு நாகரீகமாகவும்,பண்பாடாகவும் வலுப்பெற்றிருக்கையில் அந்த சமூகத்தின் இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மத்தியில் இத்தகைய போதை பழக்கவழக்கங்களே மிகப்பெரியதொரு அடியை கொடுத்தன.இதனால் அவர்களின் சிந்தனையும்,நடத்தையும் இஸ்லாமிய அச்சிலிருந்து நழுவின.இதுவும் கூட ஸ்பெயினில் இஸ்லாம் வீழ்ந்த காரணங்களில் ஒன்று.

எனவே,சிந்தனை மழுங்கடிப்புக்கும்,தெளிவின்மைக்கும் இதுபோன்ற போதைபொருள்களே அவர்களுக்கு (முதலாளித்துவத்திற்கு)பெரிதும் உதவுகிறது.

இன்றைய உலக வியாபாரமென சொல்வதையும் நாம் கொஞ்சம் புரியவேண்டிய அவசியம் உள்ளது.ஏனெனில்,இவ்வுலகம் இன்றைக்கு முதலாலித்துவாதிகள் என சொல்லப்டக்கூடிய சுரண்டல் வாதிகளின் கையில் பிடிபட்டு குறிப்பட்ட சிலருக்காக உருவாக்கப்படுகிறது.மக்கள் நலன் என்ற வார்த்தையெல்லாம் அவர்களின் ஏடுகளிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது எனலாம்.

இன்றைக்கு நீதிகள் நிதிக்கானதாக அதாவது ‘நிதிமயப்படுதல்’ ஆக மாறிவிட்டது.நீதிமன்றங்களும் நிதிவான்களின் வசப்பட்டுவிட்டது.1980 ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் “மனிதன் இரண்டாம் பட்சமானவன்” என்ற தீர்ப்பை வழங்கியது.இதனை இன்றைய போதைபொருள் உலகுடன் ஒப்பிட்டு பாருங்கள்.அதனால் மனிதனுக்கு என்னதான் தீங்குகள் விளைந்தாலும் அதில் கிடைக்கும் இலாபத்தை பார்க்கும் போது மனிதன் இரண்டாம் பட்சமானவன்தான் என்று மக்களின் எதிர்ப்பு குரலை கவனிக்காமல் நகர்கின்ற சர்வதேச வியாபாரிகளுக்கு தான் நாம் போதைபொருள்களை உபயோகிப்பதின் மூலமாக ஆதரவு கரம் நீட்டி வருகிறோம்.

இன்றைய உலகின் எதார்த்த நிலையை சொல்வதானால் மக்களுக்கான வளர்ச்சி என்பது மாறி வளர்ச்சிக்கு பயன்படும் மக்கள் என்பதாக மாறிவிட்டது.

என்னதான் திரைப்பட ஆரம்பம் “smoking causes cancer” “புகையிலை உயிரை கொல்லும்”என்ற விளம்பரத்துடன் தொடங்கினாலும் படக்காட்சிகளில் தவிர்க்க முடியாத காட்சியாக புகைபிடித்தல் உள்ளது.இன்றைய வியாபார உலகத்தின் எதார்த்த நிலை இதுதான்.

வளர்ச்சி எனும் சிந்தனையை நம் மனதில் ஊட்டி ஒருவிதமான நம்பகத்தன்மையை ஊக்குவிப்பு செய்கின்றனர்.

இன்றைக்கு என்னுடைய ஆசை(passion)என்று போதைபொருள்களின் மீது அடிமைப்பட்டு கிடக்காமல் அந்த ஆசையை நிவர்த்திசெய்ய உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் தான் இதுபோன்ற கொடும் தீமை தரும் விஷயங்களில் இருந்து விலகமுடியும்.

போதைபொருள்களை பயன்படுத்தி ஆசாபாசங்களுக்காக மட்டுமே வாழ்வது சிறந்ததொரு வாழ்வல்ல என்று சொல்வது மட்டுமல்லாமல் அதனுடன் சேர்ந்து பயணிப்பதை இஸ்லாமிய மார்க்கம் சைத்தானிய செயலாக வர்ணிக்கிறதது.
“நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.”
(அல்குர்ஆன் : 5:90)

போதைப்பொருள்கள் சமூகத்திலிருந்து மட்டுமல்ல குடும்பத்திலிருந்தும் நம்மை தூரப்படுத்தும்.வாழ்க்கையை அதன் போக்கிலிருந்தும் திசைமாற்றி விடும்.போர்க்கொடிகள் இருக்கவேண்டிய இளசுகளின் கையில் விஷம் நுரைக்கும் கோப்பைகள் இருப்பதே முதலாளித்துவத்தின் வெற்றிதான்.

-முஹம்மத் அலி