பேராசிரியர் தாரிக் ரமழான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி டைம்ஸ்’ இதழின்படி, அடுத்த நூற்றாண்டை ஆழப்போகும். சிந்தளையாளர்கள் நூறுபேரில் 19 இடத்தை தாரிக் ரமழான் பெற்றிருக்கிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன இஸ்லாமிய சிந்தனைக்கான பேராசிரியராகவும், கட்டார் பல்கலைக்கழகம், மொரோக்கோ, டோக்கியோ மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். இன்னும், இஸ்லாமியச்சட்டம் மற்றும் ஒழுக்கவியலுக்கான நிறுவனத்தில் இமாம் யூகப் அல்கர்ளாவியுடன் இணைந்து தலைமைப் பதவி வகிக்கிறார்.

தாரிக்ரமழான் எகிப்திய முஸ்லீம் குடும்பத்தில் 20 ஆகஸ்ட் 1966 அன்று ஜெனீவா, சுவிச்சர்லாந்தில் பிறந்தார். எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவம் என்ற பேரியக்கத்தை நிறுவிய இமாம் ஷஹீத் ஹசனுல் பன்னா அவர்களின் இளைய மகள் வஃபா அல்பன்னாவிற்கும், செய்யத் ரமழான் அவர்களுக்கும் தாரிக் ரமழான் பிறந்தவர். இவருடைய தந்தைக்கும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துக்கும் தொடர்பு இருந்த காரணத்தால், கமால் அப்துல் நாசரால் சுவிட்ஸர்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டார். தனது முதுகலைப் பட்டத்தை தத்துவம் மற்றும் பிரான்ஸ் இலக்கியத்தில் பெற்றார். டாக்டர் பட்டத்தை அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளில், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். பின்னர், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், ஹதீஸ், தப்ஸீர், உலுமுல் குர்ஆன், மகாஸித் அல் ஷரீஆ போன்ற இஸ்லாமியச் சட்டவியல் துறைகளை அல்அஸ்ஹர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் 10 ஆண்டுகளாக கற்றது குறிப்பிடத்தக்கது. மத்தியக் கிழக்கில் இராணுவ சர்வாதிகாரங்களை விமர்சித்ததன் விளைவாகவும், ஃபலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு பணத்தாலும், கருத்தாலும் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் பேராசிரியர் தாரிக் ரமழானுக்கு வீசா கொடுக்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தாரிக் ரமழான் அவர்களுடைய ஆய்வுகள் இஸ்லாமியக் கோட்பாடுகள், பன்மைத்துவம், சக வாழ்வு, சிறுபான்மை முஸ்லிம்களின் அடையாளப் பிரச்சனை குறித்து பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய ஆய்வுகள் இரண்டு வகையான படித்தரங்களைக் கொண்டது ஒன்று. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சமூகத்துடையது. அடுத்து, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் சமூகத்துடையது. இப்படித் தரங்களில் பல்வேறுவிதமான ஆய்வுகளையும். புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்த உலகை தாருல் இஸ்லாம் (இஸ்லாமிய பூமி). தாருல் ஹர்ப் (போரின் பூமி) என்ற இரட்டை புரிதலுடான அணுகுமுறையை எதிர்க்கும் தாரிக் ரமழான், அதற்கு மாறாக இந்த உலகை தாருல் தஃவா என்ற நோக்குடன் கருத வேண்டும் என்கிறார். அவர் எழுதிய Radical Reform என்ற புத்தகத்தில் ஃபிக்ஹ் சட்டங்களுடான அணுமுறையைக் குறித்து விளக்கியிருகிறார். இன்றைய முஸ்லிம்கள் தங்கள் வரலாற்றை மரபு ரீதியாக அணுகுவதிலிருந்து மாறவேண்டும் எனவும், அதை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இன்றைய மாறிவரும் சூழலுக்கேற்ப இஸ்லாமிய விழுமியங் களைப் (Values) பிரயோகிக்க வேண்டும் என்கிறார். இமாம் இப்னு தைமியா, இமாம் இப்னு கையும், இமாம் ஷாதிபி போன்றோர் முன்வைத்த மகாஸித் ஷரியாவின் சிந்தனையை ஆதரிக்கும் தாரிக் ரமழான், இச்சிந்தனையை நவீன காலத்தில் வலுவூட்டுவதன் மூலமாக மேற்கிலும் இஸ்லாம் உயிரோட்டத்துடன் வாழ முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இன்றைய நவீன சூழலில் இஸ்லாமியச் சட்டத்தினைக் குறித்த மேற்குலகம் கொண்ட தவறானப் பார்வையைகளையும், மேற்குலகம் இஸ்லாமியச் சட்டத்தினைக் கண்மூடித்தனமாக தவறு என்பதையும் தாரிக் ரமழான் எதிர்கிறார். குறிப்பிட்டதொரு சட்டம் எந்த காலச் சூழ்நிலையில்? எந்தச் சமூக அமைப்பில்? அந்த சட்டம் எந்த இலக்கினை அடையமுற்படுகிறது? போன்ற காரணிகளை கவனமாக ஆராய்ந்து அதற்கேற்றார்போல் இஸ்லாமியச் சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்கிறார். இந்தப் பிரச்னையில் ஒற்றைப் புரிதலுடான ஸலபி சிந்தனைப் போக்கையும் எதிர்க்கும் ரமழான், இஸ்லாமிய நாடுகளை மரணதண்டனை, சித்திரவதை, கல்லால் அடித்துக் கொலை செய்தல் போன்ற தண்டனைகளை தற்காலிகமாக நிறுத்தும்படி அழைப்பு விடுத்தார். இதுபோன்ற தண்டனைகளும் நடைமுறைப்படுத்துவ தற்கான சூழல் பற்றி திறந்த கலந்துரையாடலுக்கான பொது அழைப்பொன்றை இஸ்லாமிய அறிஞர்களிடம் முன்வைத்தார்.

இன்றைய நவீன சூழலில் இஸ்லாமிய அறிஞர்களால் பின்பற்றபட்டுவரும் Adaptation Reform முறையை அவர் விமர்சிக்கிறார். பதிலாக Transformation Reform முறையை அதிகம் வலியுருத்துகிறார். மேற்கத்திய வாழ்க்கை அமைப்பிலிருந்து முஸ்லிம்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் ஹலால்-ஹராம் சட்டங்களை முன்வைக்கின்றனர். இந்த சூழலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இம்முறையை Adaptation Reform என அவர் அழைக்கிறார். இவ்வகையான சீர்திருத்த முயற்சி பிரச்னைகளைத் தீர்த்துவிட போதுமானதாக இல்லை. மாற்றமாக ஷரிஆவின் அடிப்படை இலக்குகளை மையமாக வைத்து பிரச்னைகளுக்கான முழுமையானத் தீர்வு முன்வைக்கப்படுவதை Transformation Reform என அழைக்கிறார்.

நவீன உலகம் எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூகப் பிரச்னைகளுக்கு ஆகியவற்றிற்கு முழுமையானத் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ரமழான் முன்வைக்கிறார். இதனடிப்படையில் நவீன இயற்கை மற்றும் சமூக அறிவியலாளர்களும் (scholars of context) மார்க்க அறிஞர்களும் (scholars of text) அதிகபடியான கருத்து பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனவும் இது போன்ற கலந்துரையாடல் நடக்கும் போதே நவீன காலம் எதிர்நோக்கும் பொருளாதாரம், அரசியல், சமூகவியல் பிரச்னைகளுக்கு முழுமையானத் தீர்வு முன்வைக்கப்பட முடியும் என்கிற இதனடிப்படையில் தாரிக் ரமழானின் தலைமையில் கட்டாரைமையமாக வைத்து இயங்கும் Centre for Islamic Legislation and Ethics (CILE) நிறுவனம் தனது நிகழ்ச்சி நிரல்களை மேற்கூறிய ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் இலக்கில் பயணிக்கிறது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.

இஸ்லாமிய ஷரியாவின் மரபு ரீதியான புரிதலை மறுஆய்வுக்கு உட்படுத்தும் தாரிக் ரமழான், ‘ஷரிஆ என்ற சொல்லின் பொருள்களான (Coming back to the source) மற்றும் (A way to follow) இதில் இரண்டவாதாக உள்ள (A way to follow) என்ற அர்தத்திலே புரியப்பட வேண்டும் என்கிறார். ஷரியாவின் இரண்டு வகையான பகுதிகள் உள்ளன. ஒன்று காலத்தால் மாற்றம் பெறாத சட்டங்கள் (Immutable Principles) அதாவது தொழும்முறை, நோன்பு , ஹஜ் செய்யும் முறை ஆகியவற்றை குறிப்பிடலாம். மற்றொன்று காலம், இடம், சூழலுக்கேற்ப மாறக்கூடிய சட்டங்கள் (Changeable Principles). இதில் இரண்டாவது வகை வழிகாட்டல்களில் இருந்து நாம் அடிப்படை களையும், வழிகாட்டல்கள் அடைய முற்படும் இலக்குகளையும் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதாவது எந்த பின்புலத்தில் அல்லாஹ் குறிந்த வழிகாட்டலை இறக்கினான்? என்பதும் அவ்வழிக்காட்டலில் இருந்து முற்படும் நியாயத்துவம் என்ன என்பதும் குறித்த வழிக்காட்டலை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக எந்த இலக்கினை நோக்கி அல்லாஹ் வழிநடத்துகிறான்? என்ற கேள்விகளுக்கு விடைகாண்பதன் வழியாக அடிப்படை களையும், இலக்குகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.

சூழ்நிலைக்கேற்ப இஸ்லாமிய ஷரியாவிளை கட்டியெழுப்புவதும் மற்றும் அதன் செயல்படுத்தன்மையினைத் தீர்மானிப்பது மனித அறிவின் மீதே தங்கியுள்ளது என தாரிக் ரமழான் வாதிடுகிறார் (Construction of islamic Shariah based on intellectual dynamism). அதனால் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் தெளிவுரைகளை வெறும் நம்பிக்கை இருப்பது போலவே அதன் செயல்படுத்தன்மை குறித்த அறிவுத்தெளிவுடன் இருக்கவேண்டும் என ரமழான் குறிப்பிடுகிறார். குறிப்பாக, இறைவனின் வழிகாட்டுதலை செயல்படுத்தும்போது, அது ஆன்மீக வழிக்காட்டலா? அல்லது சமூகவியல் வழிக்காட்டலா? அல்லது அரசியல் வழிக்காட்டலா? என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதில் மாறும் அம்சங்கள் எவை ? மாறா அம்சங்கள் எவை? அவ்வழிக்காட்டலின் இலக்கு என்ன? அவ்வழிக்காட்டல் சொல்ல வரும் நிலையான அடிப்படைகள் என்ன? எந்த சூழ்நிலைப் பின்புலத்தில் எப்படி அதனைப் புரிந்துகொள்ள வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான விடையைப் பெற்றுக்கொள்வதுதான் இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படை என்கிறார் தாரிக் ரமழான்.

இவ்வாறு வஹியைப் புரிந்துகொள்வதில் நம்பிக்கையுடன் இணைந்த அறிவின் புலமைத்துவமே இஸ்லாமிய ஷரியாவின் மீதாள ஒருமனிதனின் முழுப்பற்றிற்காண சான்றாகும் (Faith and intellectualism on divine text) என்கிறார்.

ஒவ்வொரு முஸ்லிமும் ஏதோவொரு வடிவில் அரசியலுடன் தொடர்புபடுவதாக ரமழான் குறிப்பிடுகிறார்.

ஒரு முஸ்லிம் தன்னளவில் சிறந்த தனி மனிதனாக வாழவேண்டுமாக இருந்தாலும்கூட, அரசியல் கலந்துரையாடல்களில் பங்கேற்பது இன்றியமையாதது என தாரிக் ரமழான் வாதிடுகிறார். ஏனெனில், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல், மனித சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதற்காக போராடாமல், சமூக நீதிக்காக களத்தில் இறங்காமல் சிறந்த முன்மாதிரி தனிமனிதாக மாற முடியாது. சிலர் நினைப்பது போல் தன்னைத் திருத்திவிட்டே மற்றவரைத் திருத்தவேண்டும் என்றில்லை. மாறாக, தன்னைச் சீர்திருத்தும் அதே நேரம் சூழலையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனின் தனிப்பட்ட சீர்திருத்தம் என்பது சமூக சீர்திருத்தத்தில் தங்கியுள்ளதொரு விஷயமாகவே இஸ்லாம் நோக்குகிறது.

எனவே, சமூக சீர்திருத்தப் போராட்டத்தை ‘அல்ஜிஹாத்’ என நாம் அழைக்கிறோம். மேலும், ‘அல்ஜிஹாதை’ அரசியல் சார்ந்த பணியாக இஸ்லாம் வரையறை செய்கிறது. இங்கு ஒரு முஸ்லிமின் தனிப்பட்ட மாற்றம்கூட அரசியல் மாற்றத்தில் தங்கி நிற்பதை கவனிக்கலாம் என்கிறார் தாரிக் ரமழான். இந்த வகையில், சர்வதேச ரீதியில் இடம்பெறும் அரசியல் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களில் முஸ்லிம் சமூகம் பங்கேற்பது அவசியமானது. இந்த வகையில் சமகால அரசியல் உலகில் பெரிதும் விவாதிக்கப்படும் ஜனநாயகம் பற்றி மேற்குலகினதும், இஸ்லாமிய உலகினதும் உள்ளீடுகள் பற்றி தனது கருத்துகளை தாரிக் ரமழான் பகிர்ந்து கொள்கிறார்.

இஸ்லாமியக் கோட்பாட்டுடன் ஜனநாயகம் எப்புள்ளியில் இணைகிறது என்பதனை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்து வதற்கு முன்னர், அதனோடு தொடர்புடைய சில கேள்விகளுக்கான தெளிவான விடையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தாரிக் ரமழான் எழுதுகிறார். அதில் முதலாவது, ‘ஜனநாயகம் என்ற கருத்தியலின்; உண்மையான அர்த்தம் என்ன என்பதாகும். இன்று மேற்குலக அரசியல் மாதிரிகளை மனதில் நிறுத்திக் கொண்டு ஜனநாயகத்தினை கால, சூழல் மற்றும் இட பரிமாணங்களுக்கு அப்பால் செயற்படுத்த முடியுமான அரசியல் மாதிரியாக (Political Model) சிலர் பேசி வருகின்றனர். இது பிழையான வாதமாகும். ஏனெனில் ஜனநாயகம் என்பது அரசியல் மாதிரியல்ல. மாறாக, ஜனநாயகம் என்பது நிலையான அரசியல் விழுமியங்களும், அடிப்படைகளும் (Political values) ஆகும். எனவே, இந்த விழுமியங்களின் ஒளியில் ஒவ்வொரு நாடும் தனது கலச்சாரம், வரலாறு, இனப்பரவல் மற்றும் கூட்டு உளவியல் (Collective Psychology) போன்றவற்றிற்கு ஏற்ப அரசியல் மாதிரிகளை ஜனநாயகமயமாக்கல் எனலாம். மேற்குலகிலும்கூட பிரான்ஸ், நாட்டிலும் அரசியல் நிர்வாக மாதிரிகள் வித்தியாசமானவை. ஆனால், அவையனைத்தும் பொதுவான அரசியல் விழுமியங்களில் உடன்படுகின்றன. இவ்வாறு ஜனநாயக விழுமியங்களை மேற்கு நாடுகளின் மாதிரிகளுடன் இணைத்து விளங்கிக்கொள்வது தவறு. இந்தப் பார்வை முஸ்லிம் மூன்றாம் உலக அரசியல் கட்சிகளிடம் காணப்படுவதாக பேராசிரியர் தாரிக் ரமழான் கூறுகிறார்.

அதாவது, இஸ்லாம் அரசியலையும், ஆன்மீகத்தையும் உள்ளடக்கிய மார்க்கம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இரண்டையும் இஸ்லாம் அணுகும் விதம் வித்தியாசமானது. ஆன்மீகத்தினை வலுவூட்டும் இபாதத் சார்ந்த வழிகாட்டல்களைப் பொருத்தவரை, அதில் மனித சிந்தனையைப் உபயோகிப்பதற்கு எதுவுமில்லை. அவ்வழிகாட்டல்கள் அருளப்பட்ட முறைமையை ‘மேலிருந்து கீழ் நோக்கி (Top down approach) அணுகுமுறை எனலாம். இப்பிரிவில் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றனவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இத்தகைய மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறையை வாழ்வியல் விவகாரங்களான அரசியல், பொருளதாரம், கல்வி, கலை போன்றவற்றின் இஸ்லாம் கையானவில்லை. மாறாக, இவற்றினை அணுகும்போது கவனத்திற் கொள்ளவேண்டிய சில ஒழுக்க விழுமியங்களையும் (Values and principles), இவற்றால் அடையப் பெறவேண்டிய உயர் சமூக இலக்குகளையும் (Objectives) மாத்திரமே இஸ்லாம் தொகுத்தளித்துள்ளது. அவற்றின் ஒளியில் இவ்வாழ்வியல் துறைகளை கையாளும் மற்றும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தினை முழுமையாக மனித சிந்தனைக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான். இங்கு வாழ்வியல் விவகாரங்களை நிர்வகிப்பதில் அதிகாரம்’ பிரயோகிக்கப்படும் செயல்முறை கீழிலிருந்து மேல் நோக்கியதாக (Bottom to up appraach) அமைவதனை நோக்கலாம். அதாவது, வாழ்வியல் விவகாரங்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவேண்டும் என்றே இஸ்லாம் வழிகாட்டுகிறது. இவ்விவகாரங்களில் மக்களின் ஏகோபித்த தீர்ப்புக்கு எதிரான கருத்தொன்றை எந்த இஸ்லாமிய அறிஞனும் இஸ்லாத்தின் பெயரால் திணிக்க முடியாது எனவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இடங்களில் முஸ்லிம்களிடத்தில் அடையாள பிரச்சனை (identity crisis) இருப்பதாக கருதும் ரமழான், இதனை விளக்கும்போது “முஸ்லிம்கள் தங்களது நாட்டின் கலாச்சாரத்தை, நாகரிகத்தை, வரலாற்றை மற்றும் மொழியை விட இஸ்லாமியக் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் பெரும்பான்மை சமூகத்திற்கும் மத்தியில் ஏற்படும்.

இதன் விளைவாக, முஸ்லிம்கள் தங்கள் நாட்டைச் சார்ந்து நிற்கும் உணர்வும், குடியுரிமையும், அவர்கள் பின்பற்றும் மார்க்கத்தின் காரணமாக கேள்விக்குறியாக்கப்படும் நிலையே அடையாளப் பிரச்னை என்கிறார். இதுபோன்ற காரணங்களால் முஸ்லிம்கள் தனித்து விடப்படுவதற்கான சூழ்நிலை இருப்பதாக சுருதுகிறார். இதைத் தவிர்க்க கலாச்சாரம், நாகரிகம், வரலாறு, மொழி மற்றும் நாட்டின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் பங்கு பெறவேண்டும் என்கிறார்.

இதுபோன்ற இன்றைய நவீன சூழல் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்குத் தீர்வை முன்வைக்கும் தாரிக் ரமழான், பல்வேறு விதமான ஆய்வுகளையும், புந்தக்கங்களையும் எழுதியுள்ளார். The Messerger, the Meanings of the Life of Muhammad, in the Footsteps of the Prophet: Lessons from the Life of Muhammad,Islam and the Arab Awakening, Radical Reform: Islamic Ethics and Liberation, முதலிய நூல்கள் பிரபலமானவை.

எஸ். நபில் அஹ்மத், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர், sio தமிழ்நாடு