இஸ்லாமிய புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவரான மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவருடைய சிந்தனைகளாலும், கருத்துகளாலும், அரசியல் செயல்பாடுகளாலும் உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர் என்றால் அது மிகையன்று. குறிப்பாக எகிப்து முதலான முஸ்லிம் நாடுகளில் அவருக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது. எகிப்தின் இஸ்லாமிய இயக்கமான இக்வான் அல் முஸ்லிமூனின் முன்னோடியாக அறியப்படும் ஷஹீத் சையத் குதுப் (ரஹ்) மௌதூதியால் கவரப்பட்ட ஓர் ஆளுமைதான்.

சையத் குதுப் 1951ஆம் ஆண்டு இக்வான்களுடன் இணைந்து தனது இஸ்லாமிய இயக்கச் செயல்பாட்டைத் தொடங்கினார். அவர் மௌதூதியைக் கற்பதற்கு ஏதுவாக இது அமைந்தது. மௌதூதியின் எழுத்துகள் வலுவான தாக்கத்தை குதுபின் சிந்தனைப் போக்கிலும் இஸ்லாமியப் புரிதலிலும் ஏற்படுத்தி, இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக உணரச் செய்யவும், மேற்குலகச் சிந்தனைச் சிறையிலிருந்து அவர் மீளவும் உதவின. 1950களின் வாக்கில் குதுபின் ஆக்கங்களில் மௌதூதியின் சிந்தனைமுறையையும் சொல்லாடல்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஜாஹிலியா, ஹாகிமியா, மன்ஹஜ், ஜிஹாத் போன்றவை இடம்பெற்றுள்ளன. இறை ஆட்சி சார்ந்து ‘முஸ்தக்பல் லி ஹாதா அத்தீன்’ எனும் நூலில் உரையாடும் குதுப் மௌலானா மௌதூதியின் ‘அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் நூலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். குதுபின் முக்கிய படைப்பான ‘ஃபீ ழிலாலில் குர்ஆன்’ தஃப்சீரில்கூட மௌதூதியின் மிகை யூக்கம் வெளிப்படுகிறது. உண்மையில், சையத் குதுபின் சிந்தனையை மௌலானா மௌதூதியின் கருத்துகள் செழுமைப் படுத்தின. அத்தோடு இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதற்காக அவர் மேற்கொள்ளும் கருத்தியல் யுத்தத்துக்குத் தேவையான அறிவுசார் தன்னிறைவையும் அவை வழங்கின.
சையத் குதுப் (ரஹ்) எகிப்து அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி தூக்கிலிடப்பட்டதற்குக் காரணமான
‘மஆலிம் ஃபி அத்தரீக்’ (மைல் கற்கள்) புத்தகமும் மௌலானா மௌதூதியின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து உருவானதாகக் கொள்ளப்படுகிறது.

  • நாகூர் ரிஸ்வான்